Runner
Categories: Blog Leave a comment

விலகி ஓடுங்கள்

அன்பானவர்களே, இன்றய உலகில் மனிதர்கள் ஏராளமான வாதைகளினால் துன்பப்படுகின்றனர். ஆயினும் இவற்றினின்று எவ்வாறு விடுபடுவது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். பலர் மேலும் மேலும் தேவனால் செய்யக்கூடாது என்பனவற்றை தங்களுடைய கலாசாரம், தங்களுடைய நம்பிக்கைகள், தங்களுடைய கொள்கைகள் என்னும் பெயர்களில் செய்கின்றார்கள். மேலும் பலர் தங்களுடைய அவிசுவாசத்தினால் சாபங்களையும், தேவ கோபத்தையும் சம்பாதிக்கின்றார்கள். ஏராளமானவர்கள் சாபங்களோடு வாழப் பழகிவிடடார்கள்.கண்ணிருந்தும் குருடராயும், காதிருந்தும் செவிடராய் வாழ்ந்துகொண்டு மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டு வாழ்ந்துகொண்டு போகின்றனர். கிறிஸ்தவர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்கள், ஆதி அன்பை விட்டு அகன்று தடுமாறுகின்றனர். கர்த்தரின் மகா இரக்களினாலும், கிருபையினாலும் தெரிவு செய்யப்பட்டும், பண ஆசையாலும், பொருளாசையாலும், சந்தர்ப்பவாதங்களாலும் மகிமையை இழந்து முறுமுறுத்தபடி மகிழ்ச்சி இழந்து வாழுகின்றார்கள்.
சாபங்களிலிருந்தும், வாதைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், கடன் தொல்லைகளிலிருந்தும், நிந்தனைகளிலிருந்தும், காரணமில்லாக் குற்றசாட்டுக்களிலிருந்தும், காரணமில்லாக் காயங்களிலிருந்தும், அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்தும் அவரால் மட்டுமே உங்களை விடுவிக்க முடியும். இவ்வுலகில் வேறு எவராலும் உங்களை விடுவிக்க முடியாது அன்பானவர்களே. கோழி வெட்டிடத்தேவையில்லை, ஆடு வெட்டிடத்தேவையில்லை, குடம் குடமாகப் பால் ஊற்றத்தேவையில்லை, தீமிதிக்கத் தேவையில்லை, பணம் கொட்டிப் பூஜைகள் செய்யத்தேவையில்லை.
அன்பானவர்களே, கருணைக்கடல் இயேசுகிறீஸ்துவண்டை வாருங்கள். அவர் உங்களை அரவணைக்கக் காத்திருக்கின்றார். அவரால் மட்டுமே உங்களைப் பரிசுத்தமாக்க முடியும். வேதத்திலே பாவங்கள் என்று குறிப்பிடப்பட்டவைகள் சிலவற்றை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன். அவையாவன, விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சுயநல ஆசைகள், பிரிவினைகள், கோஷ்டிப் பூசல்கள், பொறாமை, குடிவெறி, களியாட்டங்கள் என்பன. (கலாத்தியர் 5 :19-21)

இதில் 21ம் வசனத்தில் பார்த்தீர்கள் என்றால்”கர்த்தர் எச்சரிக்கின்றார்”என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது. இத்தகையப் பாவங்களைச் செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் இடம்பெற முடியாது என்று எழுதப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, நீதிமொழிகள் 6 :17-19 இல் நம் கர்த்தர் வெறுக்கும் காரியங்களை தெரிவிக்கின்றார். அவையாவன, கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக்கொல்லும் கைகள். தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள், வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன். அன்பானவர்களே, இன்றே மனம் திரும்புங்கள். நாளையல்ல இன்றே மனம்திரும்புங்கள். இந்தப் பொல்லாத பாவ அக்கிரமங்களை விட்டு விலகி ஓடுங்கள்.

Bro. Jerad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *