praying_man_at_altar
Categories: Helping Leave a comment

தேவ பயம்

அன்பானவர்களே, எம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருக்கு முன்பாகவும் , மனிதருக்கு முன்பாகவும் உத்தமமாயும், நேர்மையாயும், உண்மையான அன்போடும், கண்ணியத்தோடும் வாழ்வது மிக மிக முக்கியம். வாழ்க்கையில் முன்னேறுவதுக்கும் செழிப்பதுக்கும் இந்தப் பண்புகள் இன்றிமையாதவைகள். ஒரு பழமொழி கூறுவார்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று“. ஆம் அருமையானவர்களே, எம்முடைய இருதயத்தின் சிந்தனைகளை எம்முடைய செயல்களில் பார்க்க முடியும். எம்முடைய சிந்தனைகளை எம்முடைய முகத்தில் காணமுடியும். ஆயினும் மனிதருக்கு, ஒரு மனிதனைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்து இருக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் சகலத்தையும் அறிகிறவர். ஒருவனாலும் தேவனுக்கு மறைக்க முடியாது.

வேதத்திலே ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு அது பற்றி சிந்திப்போம். ஆதியாகமம் 18 : 9-15. இதில்ப் பார்த்தோம் என்றால், சாராள் முதலாவது மனதிலே நினைத்தாள். பின்பு நகைத்தாள். தேவன் தன்னைக் காண்கின்றார் என்பதனை அறியாமல் இருந்தாள். ஆயினும் தேவன் அவளின் இருதயத்தின் சிந்தனைகளை அறிந்தார். கர்த்தர் ஒவ்வொருவரினுடைய இருதயங்களைக் பார்க்கிறார். அவரைத் தொழுது கொள்பவர்கள் உண்மையும் உத்தமமாய் தொழுது கொள்ள வேண்டும். உண்மையில்லாத, உத்தமமில்லாத ஜெபங்களுக்கு பதில் வருவதில்லை. இதே போன்று தான், மனிதனிடத்திலும் உத்தமமாயும், உண்மையான அன்போடும், கண்ணியத்தோடும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் சக மனிதருடைய கண்ணிலே தயவு பெற வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய நாட்களில் சுயநலத்துக்காக மனிதர்களுடன் பழகுவது, நம்பிக்கைத்துரோகங்களை செய்து மற்றவர்களை ஏமாற்றுவது, பொய்களை, புரட்டுகளை அள்ளிக்கொட்டுவது, பொய்சாட்சி கூறுவது, நாமே செய்த தவறுகளை மற்றவர்களின் மேல் போடுவது, வாங்கியதை திருப்பி கொடுக்காமல் விடுவது, வாங்கியதை வாங்கவில்லை என்பது இவ்வாறாக ஏராளமான பாவங்களைச் செய்கின்றோம். பாவ உணர்வு அற்றவர்களாக வாழ்கின்றோம். இவற்றை மனிதன் காணாவிட்டாலும் கர்த்தர் காண்கின்றார். அவர் நியாயாதிபதி. நீதிபரர். தண்டிக்காமல் விடுவாரோதேவ பயம் அற்றுப்போனோம். நம் கர்த்தர் நம்மைக் காண்கின்றார் என்கின்ற பயம் அற்றவர்களாக வாழ்கின்றோம்.  துணிகரமாக பாவங்களை செய்கின்றோம்.

இவ்வாறு வாழ்ந்துகொண்டு ஜெபம் செய்வதாகக் கூறுகின்றோம். இதை ஜெபம் என்று கூறமுடியுமா? இது முதலைக் கண்ணீர். நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளை அறிந்து கர்த்தர் நம் ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிறார்.  சங்கீதம் 17:3
“நீர் என் இருதயத்தை பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்”. 
ஆகவே அன்பானவர்களே, தேவ பயம் உள்ளவர்களாக, நாம் கிறிஸ்துவினுடையவர்கள், உலகத்துக்கு ஒளியாய், சாட்சியாய் வாழ்ந்து எவ்வளவு ஆத்துமாக்களை சம்பாதிக்க முடியுமோ இயேசுகிறிஸ்துவுக்காக சம்பாதித்துக்கொண்டு எம்முடைய ஒட்டத்தை வெற்றியோடு ஓடி முடிப்போம். இயேசுகிறீஸ்துவின் நாமத்தில் ஆமென்

Bro. Jerad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *